மாசி மகம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
விருத்தாசலம்: மாசி மகத்தையொட்டி, விருத்தாசலம் மணிமுத்தாற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, தினம் தினம் ஆழத்து விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை, விருத்தகிரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.நேற்று காலை விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். மாசி மக உற்சவத்தையொட்டி, அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளி வாகனத்தில் வீதியுலா, மணிமுத்தாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதனையொட்டி, பல ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் மணிமுத்தாற்றில் கூடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.