உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை தூக்குத்தேர் திருவிழா!

செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை தூக்குத்தேர் திருவிழா!

மோகனூர்: ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் தூக்குத்தேர் திருவிழா, நாளை (பிப்., 19) நடக்கிறது. மோகனூர் அடுத்த ஒருவந்தூரில், பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தூக்குத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 13ம் தேதி காலை, 7.30 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, இன்று (ஃபிப்.,18) காலை, 8 மணிக்கு, தேர் முகூர்த்தம் செய்து, ஜோடனை செய்யப்படுகிறது. நாளை (ஃபிப்., 19) அதிகாலை, 5 மணிக்கு, ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, தேர் உள்ளூர் சுற்று எடுத்துச் செல்லப்படுகிறது. வழிநெடுகிலும், ஏராளமான மக்கள், கிடா வெட்டி, ஸ்வாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மேலும், எல்லை உடைக்க வடுகப்பட்டி எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று இரவு, 8 மணிக்கு, வடுகப்பட்டியில் இருந்து, எடுத்துக்கட்டு சாவடிக்கு தேர் எடுத்துவரப்படுகிறது. ஃபிப்ரவரி, 20ம் தேதி, காலை, 9 மணி முதல், ஒருவந்தூர்புதூர், கணபதிபாளையம், செல்லிபாளையம், தொட்டிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், வடுக்கப்பட்டி ஆகிய பகுதிகளில், கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு, தேர் வடுக்கப்பட்டி எடுத்துச் சென்று, ஓடக்காரன் பூஜை, கிடா வெட்டு நடக்கிறது. பிப்ரவரி, 21ம் தேதி, மாவிளக்கு பூஜை நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு, தேர் எடுத்துக்கட்டி சாவடிக்கு எடுத்து வந்து அலங்காரம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து உள்ளூர் சுற்றி வந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கிடாவெட்டும், வாணவேடிக்கையும் நடக்கிறது. பிப்ரவரி, 25ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !