நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்!
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சச விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நடந்தது.திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படும் தெப்ப குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.