இணையத்தில் கோவில் நிலங்கள் குறித்த தகவல்!
 இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களின் நிலங்கள் குறித்த தகவல்களை, பொதுமக்கள் அறியும் வண்ணம், இணைய தளத்தில் வெளியிட, அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 39 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், 1.83 லட்சம் ஏக்கர் பாசன வசதி கொண்ட நிலமாகவும், 2.18 லட்சம் ஏக்கர், புஞ்சை எனப்படும் வறண்ட நிலமாகவும், 21 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மானாவாரி நிலமாகவும், 36 ஆயிரத்து 627 ஏக்கர் நிலம் காலியிடமாகவு ம், 22 ஆயிரத்து 599 ஏக்கர் நிலத்தில் கட்டடங்களும் அமைந்துள்ளன. இருப்பினும், இந்நிலங்கள் குறித்த, முறையான ஆவணங்கள், அறநிலையத்துறையிடம் இல்லை. குறிப்பாக, எந்த கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது; நிலங்கள் யாரிடம் உள்ளது, அவற்றின் சந்தை மதிப்பு என்ன, என்பது குறித்த, ஆவணங்களும் அறநிலையத் துறையிடம் இல்லை.
ஆக்கிரமிக்கும் சூழல்: அதனால், தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும், ஆக்கிரமிக்கும் சூழல் உருவானது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 2009ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, "கோவில்களுக்குச் சொந்தமான, நிலங்கள் தொடர்பான, வருவாய் துறையின் ஆவணங்களை, மாவட்ட வாரியாக சேகரித்து, அவற்றை ஸ்கேன் செய்து குறுந்தகடாக பதிவு செய்ய வேண்டும்; இதற்கான, அனைத்து செயல்பாடு களையும், இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என, குறிப்பிடப்பட்டது. நிர்வாக ஆணையர் இனாம் பதிவேடு தொடர்புடைய ஆவணங்கள், சென்னை ஆவண காப்பகத்தில் கிடைக்கும் என்பதால், அவற்றை நில நிர்வாக ஆணையர் மூலமாகவும், நில அளவை பதிவேடு மற்றும் நிலவரித்திட்ட அலுவலரின் உத்தரவு நகல்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவும், பெற ஆணையிடப்பட்டது. இத்துடன், நில அளவை வரைபடம் தொடர்பான ஆவணங்கள், சென்னை மத்திய நில அளவை அலுவலக இணை இயக்குனர் மூலமாகவும் பெற்று, குறுந்தகடுகளில் பதிவு செய்து, அரசுக்கு வழங்க, வருவாய் துறையின் முதன்மை செயலர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையருக்கு ஆணையிடப்பட்டது. இருப்பினும் நிலங்கள் குறித்த, தகவல்களை சேகரிக்கும் பணி, மந்த கதியில் நடந்து வருகிறது. இதனால், மேலும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது குறித்து, அறநிலையத் துறை உயர் அதிகாரிகள், கூறியதாவது: நிலங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணி, முழுமை அடையும் நிலையில் உள்ளது. தற்போது, ஒவ்வொரு கோவில்களுக்கும் உரிய நிலங்கள் குறித்து, பொதுமக்கள் அறியும் வண்ணம், அறநிலையத் துறை இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். கூடிய விரைவில், அதற்கான பணி, நிறைவடையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.