ஒலி-ஒளி காட்சியால் தஞ்சை பெரியகோவில்...பாதிக்கும்! தொல்லியல்துறையினர்!
 தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், மாமன்னன் ராஜராஜன் ஒலி-ஒளி காட்சி அமைப்பு மூலம் அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது, சவுண்ட் எஃபெக்ட் கருவி மூலம் ஒலி எழுப்புவதால் பழமையான நினைவுச்சின்னம் பாதிக்கப்படும் என, கலெக்டரிடம் தொல்லியல்துறையினர் ஆட்சேபனை தெரிவித்தனர். தஞ்சை பெரியகோவில் வளாகத்திலுள்ள மத்திய தொல்லியல்துறை அலுவலகத்தில், பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜன் வரலாறு குறித்து ஒலி-ஒளி காட்சியகம் அமைப்பு குறித்து கலெக்டர் சுப்பையன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய தொல்லியல்துறை தென் மண்டல இயக்குனர் நரசிம்மன், சென்னை வட்ட முதுநிலை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, சுற்றுலா வளர்ச்சிக்கழக திட்ட பொறியாளர் சந்திரகலாதரன், ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ஞானசேகரன், பெரியகோவில் செயல் அலுவலர் அரவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், சுற்றுலா பயணிகள், பக்தர்களை கவரும் வகையில், ராஜராஜன் ஒலி-ஒளி காட்சியகம் அமைப்பது குறித்து தொல்லியல்துறையினர் கருத்தை கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, தஞ்சை பெரியகோவில் வழிபாட்டு ஸ்தலமாகவும், உலக பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்றாகவும், பழமையான கட்டிடக்கலைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது.
இத்தகைய சூழலில், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒலி-ஒளி காட்சி வரலாறு சுற்றுலா பயணிகளுக்கு காண்பிக்கப்படும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அதிக ஒளி உமிழும் சக்திவாய்ந்த விளக்குகள் பயன்படுத்தப்படும். சவுண்ட் எஃபெக்ட் இருக்கும். இதன்மூலம் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படலாம். பழமையான நினைவுச்சின்னம் பாதிக்கப்படும். கோவிலில் குறிப்பிட்ட பகுதிகளை ஒளி மூலம் பிரத்யேகமாக, சுட்டி காண்பிக்க வளாகத்திலுள்ள பிற விளக்குகளை அணைக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு வழிபாட்டு ஸ்தலத்தில் விளக்குகளை அணைப்பதில் பக்தர்கள் உணர்வு, நம்பிக்கை பாதிக்கப்படும். இதுபோன்ற விஷயங்களை கணக்கில் கொண்டு, உரிய முடிவெடுக்க வேண்டும் என, தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர். கோவிலுக்கு வெளியே ரோட்டில் மக்கள் நெரிசலைக் குறைக்கும் வகையில், நடைபாதை மேம்பாலம் அமைப்பதில் ஆட்சேபணை ஏதுமில்லை. ஆனால், சுரங்க நடைபாதை அமைக்க கட்டுமான பணிகள் போன்ற நடவடிக்கையால், அதிர்வுகள் ஏற்பட்டு பழமையான கோவில் கட்டிட அமைப்பு பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வகையிலும் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, மக்கள் நலனுக்கு ஏற்ற நடவடிக்கையை மேற்கொள்வதில் ஆட்சேபம் ஏதுமில்லை எனவும், தொல்லியல் துறையினர் கூறினர். இதற்கு, பெரியகோவில் பிரதோஷ விழா மற்றும் விசேஷ காலங்களில் ஒலி-ஒளி காட்சி நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதன் மூலம் பக்தர்களுக்கு இடையூறு தவிர்க்கப்படும் எனவும் அலுவலர்கள் யோசனை கூறினர். தொல்லியல்துறை, ஹிந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து பரீட்சார்த்த முறையில், பெரியகோவிலில் விளக்குகள் குறிப்பிட்ட நேரம் வரை அணைத்து, பரிசோதனை செய்யவும், பக்தர்கள் இடையூறாக கருதுகின்றனரா? என, ஆய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. 
ராஜராஜன் வரலாறு ஒலி-ஒளி காட்சி திட்டத்தை அரண்மனை வளாகம் போன்ற இடங்களில் நடத்தலாம். இதன்மூலம் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையற்ற இடையூறை தவிர்க்க முடியும் என்னும் நோக்கிலும் தொல்லியல்துறையினர் மாற்றுக்கருத்து கூறினர். தஞ்சை கலெக்டர் சுப்பையன் கூறுகையில், ""தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் வரலாற்றை ஒலி-ஒளி காட்சி மூலம் விளக்கம் அளிக்கும் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து, தீர ஆய்வு செய்து, உரிய முடிவு எடுத்து, அறிவிக்கப்படும், என்றார்.