உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நூற்றாண்டு நிறைவை காணும் செம்பை சங்கீத உற்சவம்!

நூற்றாண்டு நிறைவை காணும் செம்பை சங்கீத உற்சவம்!

பாலக்காடு: கர்நாடக சங்கீதத்தில் முத்திரை பதித்த, செம்பை வைத்தியநாத பாகவதர், தன்னுடைய கிராமத்தில் துவக்கி வைத்த சங்கீத உற்சவம், ஒரு நூற்றாண்டு நிறைவை அடையப்போகிறது. செம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில், 1914ல் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் சங்கீத உற்சவம் தொடங்கியது. அப்போது, வைத்தியநாத பாகவதருக்கு, வயது 18. அன்று முதல் தொடர்ந்து 65 ஆண்டுகள், இந்த உற்சவத்தில் அவர் பங்கேற்று வந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, நாடு முழுவதும் இருந்து பல இசைக்கலைஞர்கள், சங்கீத உற்சவத்தில் பாடியுள்ளனர். செம்பை கிராமத்தில், வைத்தியநாத பாகவதர் தலைமையில் சங்கீத குருகுலம் செயல்பட்டு வந்தது. 1945ல், அவர் சென்னையில் குடியேறிய பிறகும், செம்பை குருகுலம், தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. வைத்தியநாத பாகவதரின் தம்பி சுப்ரமணிய பாகவதர், குருகுலத்தில் மாணவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கீதம் கற்றுக்கொடுத்தார்.

ஜாதிக் கலவரங்கள், நடந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்திலும், வேறுபாடு பாராமல், எல்லோருக்கும் சங்கீத பாடம் செம்பையின் வீட்டில் நடத்தப்பட்டது. வைத்தியநாத பாகவதரும், அவரது தம்பி சுப்ரமணிய பாகவதரும், 30 ஆண்டு காலம், ஒன்றாக மேடையில் பாடினர். சுப்ரமணிய பாகவதருக்கு மூன்று மகன்கள். அவரது மறைவுக்குப்பின், மூன்று மகன்களையும், தன் குழந்தைகளைப்போல வைத்தியநாத பாகவதர் வளர்த்தார். 1972ல் வைத்தியநாத பாகவதரின் வேண்டுகோளை ஏற்ற கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ், இன்று வரை தொடர்ந்து செம்பை சங்கீத உற்சவத்தில் பாடி வருகிறார். 1974ல் சீடர் ஒளப்பண்ணமனை வாசுதேவன் நம்பூதிரியின் ஒற்றப்பாலம் வீட்டில், நவராத்திரி உற்சவ சமயத்தில் பாகவதர் மறைந்தார். அவருக்குப் பிறகு, அவரது மகள் பார்வதி, மருமகன் செம்பை நாராயணன், மகன் செம்பை ஸ்ரீனிவாசன் இணைந்து, சங்கீத உற்சவத்தை நடத்தி வருகின்றனர். தற்போது, மகள், மருமகன் காலமாகி விட்டனர்.

சங்கீத உற்சவம், நூற்றாண்டு நிறைவை அடைந்துள்ள இத்தருணத்தை கொண்டாட, செம்பை குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். மார்ச் 9 முதல் 12 வரை, பல்வேறு நிகழ்ச்சிகளுடன், சங்கீத உற்சவம் நடக்கிறது. செம்பை வைத்தியநாத பாகவதரால் சிறப்புற நடத்தப்பட்டு, ஒரு நூற்றாண்டு காணும் சங்கீத உற்சவம், நம்முடைய கலாசாரத்தை போற்றும் வகையில், ஒப்பற்ற நிகழ்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !