உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருட்டை தடுக்க பாதுகாப்பு வசதிகள் அவசியம்!

கோவில் திருட்டை தடுக்க பாதுகாப்பு வசதிகள் அவசியம்!

கோவை : கோவில் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேர பாதுகாப்பு குழு, கண்காணிப்பு கேமரா, அலாரம் போன்ற பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாகிகள் மேம்படுத்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து கோவை மாநகர போலீசார் கூறியதாவது: கோவை மாநகர பகுதியில் ௨,௦௦௦ முதல் ௩,௦௦௦ வரை சிறிய மற்றும் பெரிய அளவிலான கோவில்கள் அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் ௩௦க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருட்டு, பூஜை சாமான்கள் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க, சிறிய அளவிலான கோவில்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். சிறிய அளவிலான கோவில்களில் உண்டியல் மற்றும் பொருட்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க கோவில் நிர்வாகிகள் இரவு நேரங்களில், பாதுகாப்பு குழு அமைக்கலாம். கோவிலின் வெளியே உண்டியலை வைக்காமல், கோவில் உள்ளே கான்கிரீட் அடித்தளத்தில் வைக்கலாம். கோவிலின் வெளியே பாதுகாப்பு கருதி பெரிய அளவிலான பூட்டை போடலாம். மேலும், திருடர்களுக்கு தெரியாத வகையில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், அலாரம் போன்ற பாதுகாப்பு வசதிகளை அதிகரித்தும் கோவில் திருட்டை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !