திருச்சி சிவாலயங்களில் சிவராத்திரி விழா துவக்கம்
திருச்சி: திருச்சியில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாடு நேற்றிரவு துவங்கி விடிய, விடிய நடந்தது. திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழா துவங்கியது. இரவு 10 மணிக்கு முதல் கால பூஜை, 12 மணிக்கு 2ம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு 3ம் கால பூஜை நடந்தது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு 4ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை 4ம் கால பூஜை நடக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு நவராத்திரி மேடையில் சலங்கை நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் தொடங்கி நாளை அதிகாலை வரை நடக்கிறது. கொடிகம்பம் அருகில் உள்ள மண்டபத்தில் சிவாச்சாரியர்களில் தேவார, திருவாசக பாடல்கள் இசை நிகழ்ச்சிகும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருவாசி சிவன் கோவில், திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில், கோவத்தக்குடி சிவன் கோவில், ஓமாந்தூர் அன்ன காமாட்சியம்மன், மாசி பெரியண்ண சுவாமி கோவில் ஆகிய சிவாலயங்களில் சிவராத்திரி விழா நேற்றிரவு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.