உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் அங்காள பரமேஸ்வரி கோவில்மயானக் கொள்ளை திருவிழா

பெரம்பலூர் அங்காள பரமேஸ்வரி கோவில்மயானக் கொள்ளை திருவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. அரும்பாவூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா தற்போது நடந்து வருவதை முன்னிட்டு ஃபிப்., 28ம் தேதி பால்குடம் எடுத்தல், சந்தனகாப்பு, காப்பு கட்டுதல், குடி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல், காளி புறப்பாடு, வள்ளாராஜன் கோட்டை இடித்தல், மயான கொள்ளை திருவிழா ஆகியவை  நடந்தது. காலையில் தொடங்கிய மயான கொள்ளை நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு உதிரம் கலந்த சாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரும்பாவூர், அ.மேட்டூர், தழுதாழை, பூலாம்பாடி, வெங்கலம், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, வேப்பந்தட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து தொடர்ந்து பேய் ஓட்டுதல் நிகழ்ச்சியும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இன்று 3ம் தேதி அம்மன் மற்றும் வீரபத்திரன் சுவாமி புறப்பாடும், நாளை 4ம் தேதி சத்தாவரணம், சுவாமி அலங்கார ஊர்வலமும் நடக்கிறது. வரும் 5ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !