கபாலீசுவரர், மருந்தீசுவரர் கோவில்களில் பங்குனி பெருவிழா
சென்னை: திருவான்மியூர் மருந்தீசுவரர் மற்றும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் பங்குனி பெருவிழா, வரும், 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலின் பங்குனிமாத பெருவிழா, வரும், 7ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, இன்று, செல்லியம்மன் திருவீதி உலாவும், நாளை, விநாயகர் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 9ம் தேதி, மூன்றாம் திருநாளன்று, அதிகார நந்தி வாகனத்தில் சந்திரசேகரர், சூரிய பகவானுக்கு அருள்பாலித்தலும், வரும், 13ம் தேதி, ஏழாம் திருநாள் விழாவில், அதிகாலை, 4:30 மணிக்கு, தேர் திருவிழாவும் நடக்கிறது. வரும் 15ம் தேதி, சந்திரசேகரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதை தொடர்ந்து, கடல்நீராடலும், தெப்ப உற்சவமும் நடக்கிறது. திருவிழாவில், தினசரி இரவில், தியாகராஜர் வீதி உலா வருவார். பங்குனிமாத பெருவிழாவையொட்டி, நான்கு மாட வீதிகளை, தேர் வலம் வர வசதியாக, கோவில் முகப்பில் தார்சாலை அமைக்கும் பணியில், மாநகராட்சியினர் ஈடுபட்டு உள்ளனர். அதே போல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழா, நளை முதல், 17ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. நாளை காலை, கிராம தேவை பூஜையும், இரவு, விநாயகர் உற்சவமும் நடைபெறும். 7ம் தேதி காலை, கொடியேற்றம் நடைபெறும். வரும், 8ம் தேதி காலை, சூரிய வட்டம், இரவு, சந்திர வட்டம், அன்ன வாகனங்கள் நிகழ்ச்சியும், 9ம் தேதி, அதிகார நந்தி காட்சியும், 10ம் தேதி, புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்கள், 11ம் தேதி, வெள்விடை பெருவிழாக் காட்சி நடைபெறும். தொடர்ந்து, 12ம் தேதி, பல்லக்கு விழா, 13ம் தேதி, திருத்தேர், 14ம் தேதி, அறுபத்து மூவர் நாயன்மார்கள் திருக்காட்சி நடைபெறும். வரும், 15ம் தேதி, இறைவன் இரவலர் கோல விழா, 16ம் தேதி, தீர்த்தவாரி, திருக்கல்யாணம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறும்.