உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசிப்பெருந்திருவிழா: ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு

மாசிப்பெருந்திருவிழா: ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கைலாசநாதர் கோவில் மாசிப்பெருந்திருவிழா முன்னிட்டு வரும் 9ம் தேதி வடமாடு ஜல்லிக்கட்டு நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த போசம்பட்டி பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா நடப்பது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டும் மாசிப் பெருந்திருவிழா முன்னிட்டு வரும் 9ம் தேதி வடமாடு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்தனர். மொத்தம் 60 அடி சுற்றளவு கொண்ட மைதானம், பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்காக காலரி, பாதுகாப்பு ஏற்பாடுகள், வருவாய்த்துறை, கால்நடைத்துறை, மருத்துவத்துறையினர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்காக தனி கொட்டகைகள், காயமடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடமாடு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மனோகரன், எஸ்.பி., உமா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றுமுன்தினம்(3ம் தேதி) ஆய்வு செய்தனர். நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு விதிமுறைகளை ஏற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் போசம்பட்டியில் வரும் 9ம் தேதி வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மகிழ்ச்சியடைந்துள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வழக்கம்போல் வடமாடு ஜல்லிக்கட்டை குதூகலத்துடன் நடத்த முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !