திருக்காமீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி தீவிரம்!
புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், விரிசல் விழுந்த, ராஜகோபுர உத்தரத்தை அகற்றும் பணி நடந்தது. வில்லியனூரில், 11ம் நூற்றாண்டில் தர்மபால சோழர்களால் கட்டப்பட்ட பழமையான திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலாலயம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவில் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில், விரிசல் விழுந்து சேதமடைந்திருந்த உத்தரத்தை அகற்றி, புதிதாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 7 டன் எடை கொண்ட ஒரே கல்லில், கெஜலட்சுமி சிற்பத்துடன் கூடிய புதிய உத்தரம் தயார் செய்யப்பட்டது. புதிய உத்தரம் பொறுத்துவதற்காக, பழைய உத்தரத்தை அகற்றும் பணி நேற்று நடந்தது. ஸ்பதி காஞ்சிபுரம் அன்பு குழுவினர், அதற்கான பணியில் ஈடுபட்டனர்.