பொள்ளாச்சி மாரியம்மன் தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
ADDED :4255 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி, தேர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவையொட்டி, பெண் பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். சிலர் விரதமிருந்து, பூவோடு எடுத்தும் அம்மனை தரிசித்து வருகின்றனர். நாளை (12ம் தேதி) தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேர் மற்றும் விநாயகப் பெருமான் எழுந்தருளும் தேரினையும் புதுப்பிக்கும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேரில், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.