உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களுக்கும் நடுகல் நடும் வழக்கம் இருந்தது!

பெண்களுக்கும் நடுகல் நடும் வழக்கம் இருந்தது!

சென்னை: வீரர்கள் இறந்தவுடன், நடுகல் நடும் மரபு, பல மாநிலங்களில் இருந்துள்ளது. ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் நடுகல் அமைக்கப்பட்டது, என, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி கூறினார். சங்க இலக்கியத்தில் பிரதிபலிக்கும் இரும்பு கால பண்பாடு என்ற தலைப்பில், மூன்று நாள், சிறப்பு கருத்தரங்கின் துவக்க விழா, சென்னை, விவேகானந்தா கல்லூரியில், நேற்று நடந்தது. இக்கருத்தரங்கை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமான, ரீச் மற்றும் விவேகானந்தா கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்று துறை இணைந்து நடத்துகின்றன. இதில், விவேகானந்தா கல்லூரியின், முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். கருத்தரங்கின் தலைப்பு குறித்து, ரீச் நிறுவனத்தின் தலைவர், சத்திய மூர்த்தி விளக்கினார்.

தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், சங்க இலக்கியத்தைச் சேர்ந்தவை. 2,800 செய்யுள் கொண்ட, சங்க இலக்கியத்தில், 2,400க்கும் மேற்பட்ட செய்யுள்கள், அகப்பாடல்களாக, எழுதப்பட்டுள்ளன. குறைவான செய்யுள்களே, புறப்பாடல்களாக எழுதப்பட்டுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளில் வாழ்ந்த மக்களின் பதிவுகளாக, புறப்பாடல்கள் உள்ளன. இருப்பினும், சங்க காலத்தின் குறிப்பிட்ட காலம் குறித்து, பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சங்க கால மக்களின் வாழ்வில், இரும்பின் பயன்பாடு அதிகளவில் இருந்தது. அக்காலத்தில், பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வீரர்கள் இறந்தவுடன், அவர்களின் நினைவை போற்றும் விதமாக, நடுகல் நடும் மரபு, நம் முன்னோர்களிடம், இருந்துள்ளது. இம்மரபு, தமிழகத்தில் மட்டுமல்லாது, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்துள்ளது, அங்கு கிடைத்த நடுகற்கள் மூலம் தெரிய வந்துள்ளன. இக்கற்கள், ஆண்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவும், தமிழகத்தின் சங்க காலத்தை சார்ந்தது. இது போன்ற தகவல்களை, தொல்லியல் ஆய்வின் மூலம் அறிய முடியும். அறிவியலை போலவே, தொல்லியல் ஆய்வுகள் இருக்கும். இதில், தற்சார்பு என்பதே இல்லை. மாணவர்கள், தொல்லியல் படிப்பதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !