காஞ்சிபுரம் : பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் கோவிலில், 63 நாயன்மார்களின் உற்சவம் நடந்தது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஆறாம் நாளான நேற்று, அறுபத்து மூவர் உற்சவம் நடந்தது. இதில், காலை, 11:30 மணிக்கு, மலர் அலங்கார சப்பரங்களில் ஏகாம்பரநாதர், விநாயக பெருமான், முருகன், 63 நாயன்மார்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நான்கு ராஜவீதிகளில், திரு வீதியுலா நடைபெற்றது. முன்னதாக, காலை, 9:00 மணி முதலே கோவிலுக்கு பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது.