காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று, திருத்தேர் உற்சவம் நடந்தது. இதில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர், காலை 6:௦௫ மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், காலை 8:20 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இதில், சிவனடியார்கள் சிவனுக்கு உகந்த மேள தாளங்களை வாசித்து, பரவசமடைந்தனர். மேலும், பெண் சிவனடியார்கள் கும்மியடித்து, தேரை வரவேற்றனர். நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்த திருத்தேர், பகல் 12:௪௫ மணிக்கு நிலைக்கு சென்றடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் வெள்ளித்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார்.பூதபுரீஸ்வரர் தேர் திருவிழா: ஸ்ரீபெரும்புதூர் சவுந்தரவள்ளி அம்பாள் உடனுறை பூதபுரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான, நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 8:00 மணிக்கு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, திருத்தேரில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளினார். தேரை சிவனடியார்கள், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பிற்பகல் 12:30 மணிக்கு, நிலைக்கு வந்து சேர்ந்தது.