உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹோலி கொண்டாட்டம்: கலர் பேட்டையானது சவுகார்பேட்டை!

ஹோலி கொண்டாட்டம்: கலர் பேட்டையானது சவுகார்பேட்டை!

வேப்பேரி: ஜாதி, மத, பேதம் பார்க்காத வட மாநிலத்தவர்கள் பலர், வண்ண பொடிவிற்பவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஹோலி கொண்டாட்டத்தை படமெடுக்க புகைப்படக் கலை பயிலும் மாணவர்கள், சவுகார்பேட்டைக்கு வந்தனர். புகைப்படக் கலைஞர்கள், தங்கள் கேமராவை மட்டுமே வண்ணப் பொடிகளிடமிருந்து பாதுகாக்க முடிந்தது. சவுகார்பேட்டை, தங்கசாலையில் பாதசாரிகள் மீதும் குடியிருப்புகளின் மாடியிலிருந்து, வண்ணநீர் நிரப்பிய பலூன் வீசப்பட்டது. வேப்பேரி, புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும், வடமாநிலத்தவர்கள் குழுவாக சேர்ந்து ஹோலியை, குடியிருப்பு வளாகத்திலேயே கொண்டாடினர். அனைத்து குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து உணவருந்தினர். ஹோலி கொண்டாட்டத்தின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் சிலர், வடமாநிலத்தவர்களுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியபடியே ஓட்டு சேகரிக்க முயன்றனர். வேப்பேரியில் உள்ள ஒரு சில குடியிருப்புகளில், ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க, மேயர் வரவுள்ளார் என்றுகூட அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை அடுத்து, ஹோலி கொண்டாட்டத்தில் ஓட்டு கேட்க யாரும் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !