முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா!
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், முள்ளாட்சி மாரியம்மன் கோவில், 70வது ஆண்டு திருவிழாவில், மூவாயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முள்ளியாற்றின் வடகரையில், முள்ளாட்சி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், 70வது ஆண்டு திருவிழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் இரவில், பல்வேறு வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3 மணி முதல், காவடி அபிஷேகம், மாவிளக்கு போடுதல், முடி காணிக்கை நிறைவேற்றுதலில் பக்தர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, மூவாயிரம் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். தேனிக்குளத்தில், இன்று (18ம் தேதி) இரவு 10 மணிக்கு, தெப்போற்ஸவ திருவிழா நடக்கிறது. டி.எஸ்.பி., அப்பாசாமி, இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, எஸ்.ஐ., அன்னை அபிராமி தலைமையில், 250 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். விழா ஏற்பாட்டை, கோவில் செயல் அலுவலர் பாஸ்கரன், ஆய்வாளர் ராஜாங்கம், கணக்கர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் செய்தனர்.