நாமக்கல் நரசிம்மர் கோவில் தேர் திருவிழா!
நாமக்கல்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், நாமக்கல் நாமகிரி தாயார் கோவில் தேர் திருவிழாவில், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்காததால், அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தனர். இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் தேர்த்திருவிழா உள்ளிட்ட விஷேசங்களில், அமைச்சர், எம்.பி.,- எம்.எல்.ஏ., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பர். தற்போது, லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கோவில் விழாக்களில் அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று, நாமக்கல் நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. அதில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார், ஆர்.டி.ஓ., காளிமுத்து மற்றும் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், அமைச்சர், எம்.பி.,- எம்.எல்.ஏ., உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும், நேற்று நடந்த தேர்திருவிழாவில் பங்கேற்கவில்லை. அதனால், எந்த பரபரப்பும் கெடுபிடியும் இல்லாமல், தேர்த்திருவிழா நடந்தது என, பக்தர்கள் தெரிவித்தனர்.