குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ..கோவிலில் கிடாவெட்டி போலீஸார் நேர்த்திக்கடன்!
துறையூர்: திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை அருகே உள்ள பெரியசாமி கோவிலில் நடக்கும் கிடாவெட்டு பூஜையில் தா.பேட்டை போலீஸார் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம், நாமக்கல் மாவட்ட எல்லையில் கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை சுற்றுலாத்தலம், மாசிபெரியண்ணசாமி, காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, திருச்சி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்தும், வெளியூருக்கு பிழைக்கச் சென்ற குடிபாட்டு மக்களும் தினமும் வந்து வழிபடுவர். ஞாயிறு, விசேஷ நாள், விடுமுறை நாளில் பக்தர்கள் பெரியண்ணசாமிக்கு கிடாவெட்டியும், காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பூஜை செய்தனர். அப்போது அங்கு போலீஸ் ஜீப் வந்தது. அதிலிருந்து போலீஸார் இறங்கியதை பார்த்து பக்தர்கள் பரபரப்படைந்தனர். "தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினர் யாரேனும் கிடாவெட்டி விருந்து படைப்பதாக புகார் வந்து அதற்காக விசாரிக்கத்தான் போலீஸார் வருகிறார்களோ என்று பக்தர்கள் பதட்டமாயினர். அதன்பின் தான், வந்தது, தா.பேட்டை போலீஸ் எஸ்.ஐ., ராசு எஸ்.எஸ்.ஐ., ரெங்கராஜ் மற்றும் போலீஸார் வழக்கமாக ஸ்டேஷன் எல்லையில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆண்டுக்கொருமுறை பெரியண்ணசாமிக்கு கிடாவெட்டியும், காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்தம் வேண்டுதலை நிறைவேற்றத்தான் வந்துள்ளனர் என்பது தெரிந்தது. கிடாவெட்டி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் கட்சி பிரமுகர்கள் போலீஸூக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து விருந்து படைத்து இலையையும் போலீஸாரே எடுத்து போட்டதை கண்டு பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.