சிங்கப்பெருமாள் கோவில் சம்ப்ரோட்சணம் கோலாகலம்!
செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், நேற்று, சம்ப்ரோட்சண விழா, கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளது. கோவிலில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 60 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் நடந்தன. கடந்த, 14ம் தேதி, திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, 15ம் தேதி, மாலை, சம்ப்ரோட்சணம் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 7:00 மணிக்கு, விஸ்வரூபம், காலை, 8:45 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, காலை, 9:15 மணிக்கு, கும்பங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு, நரசிம்ம பெருமாள், அஹோபிலவல்லி தாயார், ஆண்டாள், பக்த ஆஞ்சநேய சுவாமி சன்னிதிகளின் விமானங்களுக்கு சம்ப்ரோட்சணம் நடைபெற்றது. மாலையில், பிரஹலாதவரதர் அஹோபிலவல்லி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு, சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், பிரஹலாதவரதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில், போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால், நெரிசலை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட பெண்களிடம், மர்ம நபர்கள், நகைகளை பறித்து சென்றனர்.