காளியா தேவி கோவிலில் குண்டம் விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த ஊமைப்பாளையம் குண்டத்து காளியா தேவி கோவிலில், 25-ம் ஆண்டு குண்டம் திருவிழா நடந்தது. இக்கோயிலில் குண்டம் விழா கடந்த 4-ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக பூஜையும், சக்தி கரங்கங்கள், அக்னி சட்டி அழைத்து வருதல், அக்னி பந்தம் ஏந்தி கோயிலில் ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு குண்டம் திறந்து பூ வளர்க்கப்பட்டது. அதிகாலை பவானி அம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகங்கள், அக்னி சட்டிகளை வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்தனர். நேற்று காலை 5 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அமமனை அழைத்து வந்தனர். தலைமை பூசாரி பழனிசாமி குண்டத்துக்கு பூஜை செய்து குண்டம் இறங்கினார். பின் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அக்னி அபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடந்தது.