பேரூர் வேட்டைக்காரன்சுவாமி கோவில் திருவிழா!
பேரூர் : தொண்டாமுத்துார் அருகே மலையடிவாரத்திலுள்ள வேட்டைக்காரன்சுவாமி கோவிலில் திருவிழா நடந்தது.விராலியூர் கிராமத்துக்கு வடக்கே கோடாங்கி பள்ளமருகே மலையடிவாரத்திலுள்ள வால்கரடு எனும் மலைப்பகுதியில் வேட்டைக்காரன்சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சுயம்புவாக பக்தர்களுக்கு சிவன்சாமி காட்சியளிக்கிறார். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி பவுர்ணமிக்கு மறுநாள் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில், வெள்ளருகம்பாளையம், செலம்பனுார், ஆத்துார், சாமணம்புதுார் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமியை தரிசிப்பர். இதேபோல், விவசாயிகளுக்கும் நம்பிக்கைக்கு உரிய தெய்வமாக வேட்டைக்காரான் சுவாமி திகழ்கிறார். கோவில் திருவிழா நேற்று முன் தினம் தொடங்கியது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்திய நுாற்றுக்கணக்கான கிடாய்களை வெட்டி, பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.