உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலம்

உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலம்

ஆனைமலை : ஆனைமலையை அடுத்த கோட்டூரில் நடந்த உச்சி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர்.கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் உச்சி மாகாளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக சக்தி கும்ப ஸ்தாபனம், மாவிளக்கு, பூவோடு, அம்மன் திருக்கல்யாணம் போன்றவை நடந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூ வளர்த்தல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. பூக்குண்டம் இறங்குதல், நேற்று காலை 6:30 மணிமுதல் நடந்தது. இதில், நுாற்றுக்கும் அதிகமான மக்கள் குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி தர அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். அம்மன் அருளாளி சீனு, அம்மன் படத்துடன் கூடிய சூலாயுதம் தாங்கி குண்டத்தில் இறங்க, பூக்குண்டம் இறங்கும் விழா நிறைவடைந்தது. இதையடுத்து திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இன்று (22ம் தேதி) திருத்தேர் நிலை சேர்தல் மற்றும் பரிவேட்டையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !