இடையாறு மாரியம்மன் கோவில் குண்டம் விழா: 20 ஆயிரம் பேர் பங்கேற்பு!
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கியும், பெண்கள் தலையில் பூவாரி கொட்டியும், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 16ம் தேதி இரவு காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, ஏராளமான ஆண்கள், பெண்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனிதநீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி, ஸ்வாமியை வழிபட்டனர். நேற்று (மார்ச், 23) முன்தினம் மாலை, 4 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையலிடப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு குண்டம் பற்றவைக்கப்பட்டது. மதியம், 1 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்ற, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள, 62 அடி நீள குண்டத்தில், 5,000 ஆண்கள் இறங்கியும், 15 பெண்கள் தலையில் பூவாரி இறைத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று (மார்ச், 25) காலை, 6 மணிக்கு கிடா வெட்டும், காலை, 9 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் வேண்டி கரும்பு தொட்டில் சுமந்து வந்தும், அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். நாளை (மார்ச், 26) அதிகாலை, 4 மணிக்கு கம்பம் பிடிங்கி ஆற்றில்விடப்படுகிறது. அதை தொடர்ந்து, காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.