எல்லைப் பிடாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
சேலம்: சேலம், எல்லைப் பிடாரியம்மன் கோவில் விழாவில், ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம், வின்சென்டில் பிரசித்தி பெற்ற எல்லைப் பிடாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 18ம் தேதி பங்குனி உற்சவ விழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் பல்வேறு அலங்காரங்களில், எல்லைப் பிடாரியம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 8.30 மணிக்கு மேல், 9.30 மணிக்குள் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை, 6.30 மணிக்கு அம்மனும், பக்தர்களும், அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதலில் கோவில் பூசாரி, குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார். தொடர்ந்து, பெண்கள், ஆண்கள், சிறுவர் சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், அம்மன் ஊர்வலமும் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை, 8 மணிக்கு பால்குட ஊர்வலம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. 29ம் தேதி இரவு, 10 மணிக்கு அதிநவீன முறையில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி என்ற அலங்காரத்தில் அம்மன் சத்தாபரணம் நிகழ்ச்சியும், திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.