மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் தவிப்பு!
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவிலாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் பலர் இரவு கோவில் வளாகத்தில் தங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதிகரிப்பு: மாசி மாதம் நடக்கும் திருத்தேர் உற்சவத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த அமாவாசையன்று மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். பெரும்பகுதியினர் ஊஞ்சல் மண்டபத்தை நெருங்க முடியாமல், டிஜிட்டல் பேனர்களில் ஒளிபரப்பிய அம்மனை தரிசித்து வீடு திரும்பினர்.
முண்டியடிப்பு: இரவு 12 மணியளவில் மயானக்கொள்ளை நடக்கும் இடத்திற்கு அருகே தனியார் கடைகளுக்கு கொடுத்திருந்த மின் இணைப்பு ஒயர்கள் கூட்ட நெரிசலால் அறுந்து விழுந்தன. மின் ஒயர் அறுந்து விழுந்ததும், மின்சாரம் பாயும் என்ற பயத்தில் பெரும் கூட்டம் முண்டியடித்து ஓடியது. இதில் பக்தர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. நடைபாதை கடைகளை பக்தர்கள் கூட்டம் மிதித்து நாசமாக்கினர். இந்த நேரத்தில் பெரிய தெரு, ஒத்த வாடை தெரு வழியாக கோவிலுக்கு வந்தவர்களின் கூட்டம் திடீரென அதிகமானது. ஊஞ்சல் உற்சவம் முடிந்து கோவிலில் இருந்தும் பக்தர்கள் பஸ் நிலையம் திரும்பினர். கோவிலில் இருந்து வந்த பக்தர்கள் வெளியேற முடியாமலும், பஸ் நிலையத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாமலும் நெரிசல் ஏற்பட்டது. திருவிழாவின் போது சுவாமி மயானத்தில் இருந்து வெளியே வந்து கொடுக்கன்குப்பம் சாலையில் இணையும் பிரதான சாலையில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய வயதானவர்கள் சிலர் மூர்ச்சையானார்கள். குழந்தைகளும், பெண்களும் கதறி அழுதனர். இங்கு ஒப்புக்கு கூட ஒரு போலீஸ் இல்லை. ஒரு மணி நேரத்திற்கு பிறகே தானாகவே நெரிசல் குறைந்தது. கொடுக்கன் குப்பம் சாலையில் இருந்து உதவி ஆணையர் அலுவலகம் எதிரே கோவிலுக்கு செல்லும் கேட்டிலும் நெரிசல் ஏற்பட்டது. உள்ளே செல்ல முடியாமல் தவித்த பக்தர்கள் உடன் வந்தவர்களை தவற விட்டனர்.
தொடர்கதை: குழந்தைகளை தவற விட்டவர்கள் பல இடங்களிலும் குழந்தைகளை தேடி அலைந்தனர். சிலர் கதறி அழுதனர். கூட்டம் அதிகரிக்கும் ஒவ்வொரு மாதமும் இது போன்ற பிரச்னைகள் தொடர் கதையாகி வருகிறது. இதை சரி செய்ய இது வரையில் நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேல்மலையனூரில் பிரதான சாலைகளில் இருந்து கோவிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அகலப்படுத்தி, அனைத்தையும் பக்தர்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நடவடிக்கை தேவை: போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். பக்தர்கள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனிதனி வழிகளை ஏற்படுத்த சாத்திய கூறுகளை ஆராய வேண்டும்.இது குறித்து போலீசார், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி, பக்தர்கள் நெரிசலில் அவதிப்படாமல் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.