சோழீஸ்வரர் கோவில் மண்டபம் இடிக்க... விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு!
பெருந்துறை: பெருந்துறை, சோழீஸ்வரர் கோவிலில் உள்ள, சொற்பொழிவு மண்டபத்தை இடித்து விட்டு, மாவட்ட உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பழமையும், பெருமையும் வாய்ந்த பல நூற்றாண்டுகள் முன் கட்டப்பட்டது, சோழீஸ்வரர் கோவில். அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கோவில் வளாகத்தில் சிறிய சொற்பொழிவு மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில், ஆன்மீக சொற்பொழிவுகள், விளக்கு பூஜைகள், சுவாமி திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இம்மண்டபத்தை அகற்றி விட்டு, அந்த இடத்தில், ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ள, கோவில்களில் உள்ள உலோக சிலைகளை வைக்கும், பாதுகாப்பு மையம் கட்ட, அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உலோக சிலைகள் பாதுகாப்பு மையம், தமிழகத்தில் மொத்தம், ஏழு கோவில்களில் கட்டப்பட்டுள்ளது. காங்கேயம் சிவன்மலை முருகன் கோவிலிலும், உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில் உள்ள, சொற்பொழிவு மண்டபத்தை அகற்றி விட்டு, உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டால், ஆன்மிக சொற்பொழிவுகள், விளக்கு பூஜைகள், சுவாமி திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இடம் கிடையாது. மண்டபத்தை இடித்து விட்டு, உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் கட்ட, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். கோவில் வளாகத்தில் எவ்வளவோ காலியிடங்கள் உள்ளன. அங்கு உலோக பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். மக்கள் வசதிக்காக, பொதுமக்கள் நன்கொடையில் கட்டப்பட்ட மண்டபத்தை இடிக்கக்கூடாது. இதை கண்டிக்கிறோம், என, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்த பரிஷத், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், தெரிவித்தார்.