ஆஸ்திரேலிய கலைக்கூடத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலை அகற்றம்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, அர்த்தநாரிஸ்வரர் சிலை அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. இது போல், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்டமான அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடப்பட்டது. இந்த சிலைகளை கடத்திச் சென்று, ஆஸ்திரேலியாவில் விற்ற, சிலை கடத்தல்காரன், சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, தற்போது ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள கலைக்கூடத்தில் உள்ளது. இந்த சிலையை ஒப்படைக்கும் படி மத்திய அரசு கோருவதால், அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை சமீபத்தில் அகற்றப்பட்டது. இதே போல நியூசவுத்வேல்ஸ் பகுதி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, அர்த்தநாரீஸ்வரர் சிலையும், நேற்று முன்தினம், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து "இந்தியா விஷன் மையத்தின் நிர்வாக அதிகாரி, வினோத் டேனியல் கூறியதாவது: நடராஜர் சிலையும் அர்த்தநாரீஸ்வரர் சிலையும் இந்தியாவில் வழிபடப்படுகின்றன. இந்த சிலைகளை ஒப்படைக்கும் படி, இந்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். இது குறித்து ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2000ல், ஆஸ்திரேலிய கலைக்கூடங்களிலிருந்து, 33 பொருட்கள், சென்னை அருங்காட்சியகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, வினோத் டேனியல் கூறியுள்ளார்.