முத்துச்சாமி தீட்சிதர் 240 வது ஜெயந்தி விழா!
தூத்துக்குடி: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் 240 வது ஜெயந்தி விழா, தூத்துகுடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள அவரது நினைவாலயத்தில் நேற்று துவங்கியது. கோவில்பட்டி பாண்டிகேசவன் நாதஸ்வரம் வாசிக்க, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நினைவாலய கமிட்டி செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். மகாராஷ்டிரா அபங் ரத்னா கே.கணேஷ் குமார் துவக்கி வைத்தார். நினைவாலய கமிட்டி தலைவர் கே.எஸ்.ராமன், உதவித்தலைவர் ராதிகா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: கர்நாடக இசை குறிப்பிட்ட மதத்திற்கோ, ஜாதிக்கோ சொந்தமானது அல்ல. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. எல்லோருக்கும் மன மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் ஆனந்தத்தை கொடுக்கிறது. நான் இந்தளவிற்கு முன்னேற கர்நாடக இசை முக்கிய காரணமாக இருந்தது, என அவர் பேசினார். பின் சென்னை கீதா கிருஷ்ணமூர்த்தியின் விணை இசைகச்சேரி நடந்தது. முத்துச்சாமி தீட்சிதரின் கீர்த்தனைகள் பாடப்பட்டன.