உசிலம்பட்டியில் திருமலைநாயக்கர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், வேட்டையாடுதல், குதிரையேறுதல் போன்றவற்றில், சிறந்தவர் என்பதை எடுத்துக்காட்டும், இரண்டு சிற்பங்கள், உசிலம்பட்டி அருகே, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை உதவிப்பேராசிரியர், பா.ஜெயக்குமார், தென் கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும் என்ற தலைப்பில், ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அவர் சமீபத்தில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில் ஆய்வு செய்த போது, இரண்டு கற்சிற்பங்களை கண்டுபிடித்தார்.
புலியால் தொந்தரவு: இதுகுறித்து, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர், திருமலை, உதவி பேராசிரியர், ஜெயகுமார் ஆகியோர் கூறியதாவது: மதுரையை தலைமை இடமாகக் கொண்டு, ஆட்சி செய்த, திருமலை நாயக்கர், குதிரை ஏற்றத்திலும், வேட்டையாடுவதிலும் சிறந்தவர். 16ம் நூற்றாண்டில், மதுரையை ஒட்டிய, மலைப்பகுதிகளான, நாகமலை, மேலக்கால், விக்கிரமங்கலம், கொடிக்குளம் பகுதிகளில் உள்ள மக்கள், புலியால் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகினர். இதனால், திருமலை நாயக்கர், வேட்டையாடுவதற்காக அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்றது, பல்வேறு செப்பேடுகள் மூலம், அறியப்படுகிறது. அப்பகுதியில், சமீபத்தில் கள ஆய்வு செய்த போது, கனமான கற்பலகையில், வடிவமைக்கப்பட்ட நாயக்கர் கால கலைநுட்பத்துடன், இரண்டு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 400 ஆண்டுகளாக, சிற்பங்கள் மண்ணில் புதைந்திருந்ததால், சேதமடைந்துள்ளன. ஒரு சிற்பத்தில், உயர்ரக குதிரையின் மீது, கம்பீரத்துடன் அமர்ந்த திருமலை நாயக்கர், குதிரையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போலவும், கீழே நிற்கும், மன்னரின் உதவியாளர், அவருக்கு உதவுவது போலவும், அதே இடத்தில், பெண் ஒருத்தி அச்சத்துடன் நிற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.
குதிரை ஏற்றத்தில் சிறந்தவர்: இக்காட்சி, திருமலை நாயக்கர், குதிரை ஏற்றத்தில் சிறந்தவர் என்பதையும், அவர் வேட்டைக்கு செல்வதையும் காட்டுகிறது. மற்றொரு சிற்பத்தில், திருமலை நாயக்கர், அம்பு எய்துவதை போலவும், அவரின் வலப்பக்க தோளின் பின்புறம், அம்புகள் வைக்கும் தூணியும், செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், பெண் ஒருத்தி அச்சத்துடன், திருமலை நாயக்கரின் பின்னால், நடந்து செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இரண்டு சிற்பங்களிலும், திருமலை நாயக்கர், மன்னருக்குரிய தோற்றத்துடன் செதுக்கப்பட்டுள்ளார். நாயக்கர் கால சிற்ப கலை பாணிக்கு, இவ்விரு சிற்பங்களும் எடுத்துக்காட்டாகும். திருமலை நாயக்கர், வேட்டையாடுவது போன்ற சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது, இதுவே முதல்முறை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.