இறைவன் கணக்கு தப்பாது!
மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கணக்கு போடலாம். ஆனால், இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.ஒரு பணக்காரர் மெக்காவிற்கு தனது ஒட்டகத்தில் புனித யாத்திரை புறப்பட்டார். பல வேலையாட்களும் உடன் சென்றனர். கடும் வெப்பமுள்ள பாலைவனத்தைக் கடந்தே அவர்கள் மெக்காவை அடைய முடியும். வழியில் ஒரு ஏழை சென்று கொண்டிருந்தார்.அவரிடம் பணக்காரர், தம்பி! எங்கே செல்கிறாய்? என்றார். அவர், தான் மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்வதாகச் சொன்னார்.பணக்காரருக்கு சிரிப்பு வந்து விட்டது.ஏனப்பா! நாங்கள் ஒட்டகங்களில் பயணிக்கிறோம். எப்படியும் மெக்காவை அடைந்து விடுவோம். நீயோ செருப்பு கூட போடாமல் பாலைவனத்தைக் கடக்கப் போவதாகச் சொல்கிறாய். அங்கிருக்கும் சுடுமணலில் உன் கால் வெந்தல்லவா போகும்! உன்னால் எப்படி நடக்க முடியும்? என்றார் கேலியாக!செல்வந்தரே! எனக்கு இன்ப துன்பம் பற்றிய கவலையில்லை. என் கருத்தில் இறைவன் மட்டுமே இருக்கிறார். நான் அரசனாக இல்லாமல் இருக்கலாம், அதுபோல் என்னைக் கட்டுப்படுத்தவும் எந்த அரசனும் இல்லை. இறைவனே எல்லாமும், எல்லாப்புகழும் இறைவனுக்கே, எல்லாச் செயல்களும் இறைவனாலேயே நிகழ்கிறது என நம்புபவன், தாங்கள் புறப்படுங்கள், என்று பதிலளித்தான்.பணக்காரர் அந்த ஏழையை ஒரு அறிவீனன் எனக்கருதி ஏதும் சொல்லாமல் போய்விட்டார். பாலைவனப்பகுதிக்குள் புகுந்ததும் செல்வந்தருக்கு வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லை. அவரை வெப்ப நோய் தாக்கியது. அதற்குமேல் அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. பாலைவன சோலை ஒன்றில் தங்கிய அவருக்கு நோய் அதிகமாகி உயிர் பிரிந்து விட்டது. அப்போது, வழியில் சந்தித்த ஏழை அந்த சோலைக்குள் வந்தார். பணக்காரர் இறந்துவிட்டதை அறிந்தார்.என்ன வசதி இருந்தென்ன! இறைவனே எல்லாவற்றையும் செய்கிறான். எல்லாம் அவனே! அவனது அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை, என்று சொல்லியபடியே மெக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தான்.