உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி, குன்னூரில் மாரியம்மன் திருவிழா

ஊட்டி, குன்னூரில் மாரியம்மன் திருவிழா

குன்னூர் : ஊட்டி, குன்னூர் மாரியம்மன் கோவில்களில் நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.ஊட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த 14ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விழா துவங்கியது. தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்த திருத்தேர் ஊர்வலத்தில் அம்மன், ஆதிபராசக்தி, துர்கை, பராசக்தி, ராஜராஜேஸ்வரி, காமாட்சி, கருமாரி, மீனாட்சி, மகாலட்சுமி, ஹெத்தை, சரஸ்வதி, மூகாம்பிகை, சவுடேஸ்வரி, கொடுங்கலூர், பகவதி உட்பட பல்வேறு அலங்காரங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முக்கிய தேர்த்திருவிழா நேற்று மதியம் 1:55 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூஜைகள் கொடுத்து, உப்பு வீசி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பல இடங்களிலும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் அன்னதானம், இன்னிசை கச்சேரி நடந்தது.

*குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் தேர் ஊர்வலம் நடந்து வருகிறது. நேற்று தாசப்பளஞ்சிக சமூகத்தினர் சார்பில் 62வது ஆண்டு தேர்த்திருவிழா நடந்தது. அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. துருவம்மன் கோவிலில் இருந்து அம்மன் அபிஷேக ஊர்வலம், கரகாட்டம், சிங்காரிமேளம் முழங்க கோவிலை வந்தடைந்தது. பகல் 12:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. விழாவையொட்டி அன்னதானம், நீர்மோர்பந்தல், குளிர்பானங்கள் வினியோகிக்கப்பட்டன. காளி உட்பட பல்வேறு மாறுவேடங்கள் அணிந்தவர்களின் கலாசார நிகழ்ச்சி, வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !