கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
ADDED :4342 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் அரவான் களபலி நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 15 நாட்களுக்குமுன் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினசரி மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அரவாணிகள் தாலிக்கட்டும் வைபவம், இதனைத்தொடர்ந்து கூத்தாண்டவர் இந்திர விமானத்தில் திருமண கோலத்தில் வாண வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9.00 மணிக்கு சுவாமி பிரம்மாண்ட உருவத்தில் யுத்த கோலத்தில் தேர்வடிவில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் ஆடு, கோழிகளை பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியபின் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தபோது களபலி உற்சவம் நடந்தது.