உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் கருடசேவை, தோட்ட உற்சவம்!

பெருமாள் கோவில்களில் கருடசேவை, தோட்ட உற்சவம்!

பாலாற்றில் நடந்த நடவாவி உற்சவத்தை தொடர்ந்து, நேற்று காலை 5:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலிருந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் தங்க பல்லக்கில் சின்ன காஞ்சிபுரம் ஐயங்கார் தோட்டத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனமும், ஆராதனையும் ஊஞ்சல் சேவையும் நடந்தன. இதை தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு திருவாராதனம், நிவேதனம் செய்யப்பட்டது. இன்று காலை 4:30 மணிக்கு வரதராஜ பெருமாள் தளபதி விஸ்வத் சேனருடன் கோவிலுக்கு சென்று அடைந்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருடசேவை உற்சவம்: சின்ன காஞ்சிபுரம், புஷ்பவல்லி சமேத அஷ்டபுஜம் பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று கருடசேவை உற்சவம் நடந்தது. கருட வாகனத்தில், அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:00 மணிக்கு அனுமந்த வாகன உற்சவம் நடந்தது.

ஆதிகேசவப் பெருமாள்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் ஆண்டு சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவமான, நேற்று காலை 7:00 மணிக்கு, கருட சேவை நடந்தது. கோவில் நூறுகால் மண்ட பத்தில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, தேரடி, ரெட்டி தெரு, காந்தி ரோடு, கோவிந்தமேட்டு தெரு, நேரு தெரு, வீராசாமி பிள்ளை தெரு, செட்டி தெரு, வன்னியர் தெரு, குயவர் தெரு, திருமங்கையாழ்வார் தெரு என, பல்வேறு தெருக்களில், ஆதிகேசவப் பெருமாள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !