உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், இன்பமாக வாழலாம்!

இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், இன்பமாக வாழலாம்!

திருப்பூர்: ‘‘இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், இன்பமாக வாழலாம்’’ என, சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசினார்.


திருப்பூர், ஹார்வே குமாரசாமி திருமண மண்டபத்திலுள்ள திருவருள் அரங்கில், கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை நடக்கிறது. நேற்றுமுன்தினம் சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசியதாவது: ‘கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று’ என திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சிறந்தடியார்’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், சிறந்த அடியார், சிறப்பு இல்லாத அடியார் என இரண்டுவகை அடியார்கள் இருப்பதாக தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ‘நெய் கலந்தாற் போலச் சிறந்து’, ‘அடியார் சிந்தனையுள் தேனுாறி’ என பிரித்து பொருள் கொள்ள வேண்டும்.


கறந்த பாலுடன் இனிப்பு கட்டியும், பழச்சாறும் சேர்த்து குடிக்கும் பானம் எவ்வளவு இனிப்பாக இருக்கும்? அந்தளவு அடியார்களுக்கு இறைவன் இனிக்கிறார் என்பதே இதன் பொருள். யாரெல்லாம் இறைவனை மனமுருகி வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைவருமே அடியார்கள் தான். அவர்கள் பல பக்குவ நிலைகளில் இருக்கலாம். வெவ்வேறு வகை வழிபாடு முறைகளை கையாளலாம். ஆனாலும், இறைவனை யார், எங்கிருந்து, எந்த வழிமுறையில் வழிபட்டாலும், அவர்கள் அடியார்களே! இறைவனை வழிபடும் அடியார்கள், இன்பமாக இருப்பர். இறைவன் இன்பமே வடிவானவர். அதையே தான் அனைத்து சமயங்களும் சொல்கின்றன. அத்தகைய இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், நாமும் இன்பமாக இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !