கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ஓசூர்: ஓசூர் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெகு விமர்சையாக நடந்தது.ஓசூரை அடுத்த மத்திகிரியில், புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, கடந்த, 16ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, கோட்டை மாரியம்மன் பல்லக்கு உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, 17ம் தேதி காலை, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, வெகுவிமர்சையாக தேர்த்திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கோட்டை மாரியம்மன் முன்னே செல்ல, பெண்கள் தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்றனர்.மத்திகிரி, மிடுகரப்பள்ளி, குருபட்டி, நவதி, கர்னூர், தின்னூர் ஆகிய ஊர்களுக்கு சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், கோட்டை மாரியம்மனுக்கு விரதம் இருந்து வந்த பக்தர்கள், 15 அடி நீள அலகு குத்தி, ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் பலர், பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.