பூண்டி மாதா கோவிலில் பெரியவியாழன் நிகழ்ச்சி
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி கடந்த, 17ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பெரிய வியாழன் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முதல்நாள் தன் சீடர்களுக்கு பிரியாவிடை அளித்தார். அப்போது, சீடர்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்க வேண்டும் என, உபதேசித்தார்.இதை நினைவுகூரும் வகையில், பூண்டி மாதா பேராலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 12 பெரியவர்களை தேர்ந்தெடுத்து, கடந்த, 17ம் தேதி பெரிய வியாழன் நிகழ்ச்சி நடந்தது. இதில், பூண்டி மாதா பேராலய உதவித்தந்தை பிரேம்குமார், பெரியவர்கள் பாதங்களை தண்ணீர்விட்டு கழுவினார்.தொடர்ந்து, நள்ளிரவு, 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடந்தது. ஏற்பாட்டை செபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி, ஆன்மிக தந்தை சூசைமாணிக்கம் உள்பட பலர் செய்திருந்தனர்.இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று, கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.