பெரமனார் கோவில் கும்பாபிஷேக விழா
ஓமலூர்: ஓமலூர் அருகே புதியதாக கட்டப்பட்ட பெரமனார் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஓமலூர் அருகே, பெரியேரிப்பட்டி கிராமம், ரெட்டிபட்டியில், பெரமனார் கோவில் உள்ளது. இந்த கோவில் புதியதாக கட்டப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், எம்.செட்டிப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து, ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக, மேளதாளங்களுடன், யானை மற்றும் குதிரைகளில், புனிதநீர் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, கோவில் முன்பு அமைக்கப்பட் யாகசாலையில் சிவாச்சாரியார்கள் யாக மந்திரம் ஓதி, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில், ஓமலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.