அவிநாசியில் கொளுத்தும் வெயிலில் குதிரை ஊர்வலம்!
அவிநாசி : ஆண்டுதோறும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் சித்திரை தேர்த்திருவிழாவுக்கு முன்னதாக, சின்ன கருணைபாளையம் மற்றும் ராயம்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து குதிரை சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மங்கலம் ரோட்டிலுள்ள ஆகாசராயர் கோவிலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்தாண்டு, சின்ன கருணை பாளையத்தில் இருந்து ஆகாசராயர் கோவில் வரை, குதிரை ஊர்வலம் நேற்று நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தமாமல், ஐந்து கி.மீ., தூரம் குதிரை சிலையை பக்தர்கள் சுமந்து சென்றனர். வழித்தடங்களில், சிறப்பு பூஜையும், நீர்மோர், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. ஆகாசராயர் கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. குதிரை சுமந்தவர்கள், பொங்கல் வைத்து ராயரை வழிபட்டனர். வரும் 29ல், ராயம்பாளையத்திலிருந்து குதிரை ஊர்வல திருவிழா நடக்கிறது.