திருமறை சாஸ்திரங்கள் வீதியுலா: சிவமயம் ஆனது பொதட்டூர்!
ADDED :4184 days ago
பொதட்டூர்: அப்பரடிகள் குருபூஜை விழாவில் சாஸ்திரங்களை சுமந்து பக்தர்கள் வீதியுலா வந்தனர். இதில் பூத கண வாத்தியங்களை இசைத்து பொதட்டூர் பேட்டையைச் சிவமயம் ஆக்கினர். பொதட்டூர் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று அப்பரடிகள் குருபூஜை விழா நடந்தது. நால்வர் உழவார மன்றத்தினர் நடத்திய இந்த விழாவிற்கு, அகத்தீஸ்வர பெருமானை தலைமையேற்கச் செய்தனர். காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அப்பர் ஐம்பொன் சிலை மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் திருமறை வேதங்கள் , 14 சாஸ்திரங்கள், திருக்குறள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் தலையில் சுமந்து வந்தனர். விழாவின் சிறப்பு அம்சமாக, பூத கண வாத்தியங்களான கொம்பு, சங்கு மற்றும் 12 தோல் வாத்தியங்கள், பொதட்டூர்பேட்டை முழுவதும் இசைக்கப்பட்டன.