உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா துவக்கம்!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா துவக்கம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன், நேற்று விமரிசையாக துவங்கியது. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தஞ்சையிலுள்ள பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக நடத்தப்படும். இதன்படி, நடப்பாண்டும் சித்திரை திருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, சின்னமேளம் நிகழ்ச்சியில், சங்கீத் நாடக அகாடமி தலைவர் லீலா சாம்சன் பங்கேற்றார். தொடர்ந்து, இரண்டாம் நாளான, இன்று (26ம் தேதி) பல்லக்கு நிகழ்ச்சி, சிம்ம வாகனத்தில் விநாயகர் ஸ்வாமி எழுந்தருளுதலும் நடக்கிறது. பெங்களூரு குமாரி சுவேதா புரோகிட் சகோதரிகள் நாட்டிய நிகழ்ச்சியும், 27ம் தேதி பல்லக்கு நிகழ்ச்சியும், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளும் காட்சியும் நடக்கிறது. கோவை கிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி சார்பில், நாட்டியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி விநாயகருக்கு சந்தனகாப்பும், மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் எழுந்தருளும் காட்சியும் நடக்கிறது. தொடர்ந்து, திருச்சூர் பாலாஜி கலா பவன் சார்பில், நடன நிகழ்ச்சியும், 29ம் தேதி சுப்பிரமணியர் பல்லக்கு புறப்பாடும் நடக்கிறது. சுப்பிரமணியர் ஸ்வாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளும் காட்சி, கோவா நிருத்யாலயா குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 30ம் தேதி நால்வர் பல்லக்கில் கோவிலுக்குள் புறப்பாடும், சூரிய பிரபையில் சந்திரசேகரர் எழுந்தருளும் காட்சியும் நடக்கிறது. தொடர்ந்து, சென்னை, பரத நாட்டியாலயா குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மே, 12ம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !