கோவில் கையேடு கிடைக்குமா? சுற்றுலா பயணிகள் ஏக்கம்!
மாவட்ட வாரியாக உள்ள கோவில்களை பற்றிய தகவல் அடங்கிய கையேடு தயாரிக்கும் திட்டம், மூன்று ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்கள் குறித்து, சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள, பயணியர் கோவில் கையேடு வழங்கப்பட்டு வந்தது. இதில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், அதன் சிறப்பு, திறக்கும் நேரம், அருகில் உள்ள விடுதிகளின் முகவரி, கோவிலின் தொடர்பு எண் போன்ற தகவல்கள் அடங்கி இருக்கும். அறநிலையத் துறையின் இந்த திட்டம், தி.மு.க., ஆட்சியில் இருந்த, 2006 – 2011 ஏப்ரல் வரையிலான, ஐந்து ஆண்டுகளில் பின்பற்றப்படவில்லை. கடந்த, 2011 மே மாதம், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மீண்டும் இத்திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, கையேடு ெவளியிட்ட மாவட்டங்களில், மறுபதிப்பு செய்யவும், மற்ற மாவட்டங்களில், புதிதாக தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும், புதிய கையேடுகளை தயாரிக்கவோ, பழைய கையேடுகளை மறுபதிப்பு செய்யவோ இல்லை. தற்போது, கோடை கால விடுமுறை துவங்கி விட்டது. பலரும் குடும்பத்தோடு பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். எனவே, இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, கையேடு தயாரித்தால், அப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.