ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழா "ரெங்கா..ரெங்கா.. கோஷம் முழங்க கோலாகலமாக நேற்று நடந்தது. "பூலோக வைகுண்டம் என்று வர்ணிக்கப்படும், 108 வைனவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த, 25ம் தேதி உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல் அளவு கண்டருளினார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. காலை, 3.45 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு சித்திரை தேர் மண்டபத்தை காலை, 4.15 மணிக்கு வந்தடைந்தார். பின், 4.30 மணிக்கு நம்பெருமாள் மீன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள், "ரெங்கா..ரெங்கா கோஷம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் சித்திரைத்தேர் அசைந்தாடி வந்தது. திருவிழாவில் பங்கேற்க வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினமே ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.
துறையூர் அருகே உள்ள சிறுகளம்பூரிலிருந்து பக்தர்கள், "கோவிந்தா..கோவிந்தா என கோஷம் எழுப்பிக்கொண்டே குச்சியை சுழற்றியபடி ஸ்ரீரங்கத்தை வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை கோவில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் செய்திருந்தது. ஸ்ரீரங்கம் போலீஸ் ஏ.சி., கபிலன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரத்தை அணிந்து நம்பெருமாள் வலம் வந்தார். முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி ராமராஜா, அர்ச்சகர்கள், ரங்கநாதருக்கு உரிய வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரிகளிடம் வழங்கினர். இதில், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர்கள் ரங்காச்சாரி, கஸ்தூரி, சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
யானை ஆண்டாள் மிஸ்ஸிங்: ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள், பெருமாள் எங்கு சென்றாலும் முன்னே செல்வது வழக்கம். சித்திரை தேர்திருவிழாவின் போது கோவில் யானை ஆண்டாள், தேர் முன் நடந்து செல்லும். சமீபத்தில் ஒருவரை தாக்கியதால் நேற்று யானை ஆண்டாளை அழைத்து வரவில்லை. மாற்றாக தனியார் யானை முன்னே நடந்து சென்றது.
அறங்காவலர்குழு தலைவர் "அப்செட்: கடந்த வாரம் சுழல் முறை அறங்காவலர் உத்தம நம்பியின் பதவிக்காலம் முடிந்தது. இதையொட்டி, அறங்காவலர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க, கோவில் இணை கமிஷனர் கல்யாணிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், கூட்டத்துக்குச் சென்றால், கோவில் யானை விவகாரம், அன்னதானக் கூடத்தில் சமைக்கும் போது தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழும் என்பதால், கல்யாணி கூட்டத்துக்கு செல்லவில்லை. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் அழைப்புவிடுத்தும் அதை கல்யாணி ஏற்கவில்லை. இதனால் "அப்செட் ஆன அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், நேற்று முன்தினம் நடந்த வஸ்திர மரியாதை ஏற்கும் நிகழ்ச்சி, தேர் திருவிழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.