இருவருக்கு புனிதர் பட்டம் : வாடிகனில் பிரமாண்ட விழா!
ரோம்: போப் ஜான் பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோருக்கு, வாடிகனில், நேற்று முன்தினம், புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. ஏசுநாதர் காட்டிய வழியில், நன்னெறியில் வாழ்ந்து, அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்ற கிறிஸ்தவ பெரியவர்களுக்கு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் ஆலயம் எழுப்பி, அவரை வழிபட கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வாழ்நாளின் போதும், இறப்புக்கும் பின்பும் அற்புதங்கள் நிகழ்த்திய முன்னாள் போப் இரண்டாவது ஜான்பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோர், நேற்று முன்தினம், புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வாடிகன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில், போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையின் போது, ஜான்பால் மற்றும் ஜான் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பதவி விலகிய முன்னாள் போப், பெனிடிக்ட் உட்பட, 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.