உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி கோவில்களில் மழை வேண்டி மூன்று நாள் யாகம்!

காஞ்சி கோவில்களில் மழை வேண்டி மூன்று நாள் யாகம்!

காஞ்சிபுரம் : மழை வேண்டி, மாவட்டத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், இன்று முதல் மூன்று நாள் யாகம் நடத்தப்படுகிறது. பருவ மழை பொய்த்தது. கோடைக்கு முன்பே நீர் நிலைகள் வறண்டன. தொடர்ந்து, கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில், மக்கள் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது நிலவும் வறட்சியை சமாளிக்க மழையே தீர்வு. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் யாகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தந்த கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், கோவூர் சுந்தரேஸ்வரர், திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள், சிங்கப்பெருமாள்கோவில் பாடலாத்திரி நரசிம்மப்பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி ஆகிய கோவில்களில், இன்று முதல், காலை 5:55 மணிக்கு, யாகம் துவங்கி, காலை 7:00 மணிக்கு நிறைவடையும். இதுபோல் புதன் கிழமை வரை, மூன்று நாட்கள் நடக்கும் யாகத்தில், அப்பகுதிவாசிகளும் கலந்து கொண்டு இறையருளை பெறலாம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !