உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக முக்கிய கோயில்களில் மழைக்காக சிறப்பு யாகம்!

தமிழக முக்கிய கோயில்களில் மழைக்காக சிறப்பு யாகம்!

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழை வேண்டி இன்று யாகம் நடத்தப்படுகிறது. திருநெல்வேலிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 35 அடியாக குறைந்துவிட்டது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. எனவே மழையில்லாமல் இதே நிலை தொடர்ந்தால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும். எனவே அறநிலையத்துறையினர் மூலம் முக்கிய கோயில்களில் இன்று காலை 5.55 மணிக்கு வருண ஜெபம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள பிரதோஷ நந்தியை சுற்றிலும் சுவர் எழுப்பி நந்தியின் கழுத்து அளவுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் 11 வேத விற்பன்னர்கள் மேற்கொள்கின்றனர். அதே நேரத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று அமிர்த வர்ஷினி, மேக வர்ஷினி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் இசைக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல்அலுவலர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

திருப்போரூரில்..: தமிழகம் முழுவதும் மழை வேண்டி பிராத்தனையின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள சரவண பொய்கையில் மார்பளவு தண்ணீரில் நின்று உத்ராட்சை மாலையுடன் இன்று காலை 5.30 மணிக்கு பிராத்தனை துவங்கியது.

மதுரையில் ..: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சார்பில், மழை வேண்டி இன்று(ஏப்., 28) சிறப்பு யாகம் நடக்கிறது.அதிகாலை 5.55 மணிக்கு தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. முக்தீஸ்வரர், திருவாப்புடையார், திருமறைநாதர் கோயில்களிலும் வழிபாடுகள் நடக்கின்றன.மீனாட்சி கோயில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபத்தில், நந்திக்கு நீர் நிரப்பி வழிபாடு நடக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை மற்றும் திருஞான சம்பந்தர் இயற்றிய 12ம் திருமுறை மேகராககுருச்சிப்பண் ஓதப்படுகிறது. இசை வழிபாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !