உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தேரோட்டம்: மே 11ல் கோலாகலம்!

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தேரோட்டம்: மே 11ல் கோலாகலம்!

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திருவையாறில் ஐயாறப்பர் ஸ்வாமி கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம் வரும், 11ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர். தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஐயாறப்பர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, வருடம்தோறும் சித்திரை திருவிழா மிக விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு சித்திரை திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது. காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, 7ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏழு கிராமங்களில் இருந்து ஸ்வாமிகள் ஊர்வலமாக, கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, 11ம் தேதி தேரோட்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து, பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் வலம் வருகிறார். இதில், சுற்றவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபடுகின்றனர். தொடர்ந்து, 14ம் தேதி சப்தஸ்தான விழாவும் நடக்கிறது. இதில், ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெற்றிவேல் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று இரவு காவிரியாற்றில் பல்லக்குகளும் தில்லைஸ்தானம் காவிரியாற்றில் வாணவேடிக்கை நடக்கிறது. வரும் 15ம் தேதி தில்லை ஸ்தானம் பல்லக்கு மற்றும் ஏழு கிராம பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து, தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, கோவிலில் தீபாராதனையை முடித்து, அந்தந்த கிராமங்களுக்கு பல்லக்கில் ஸ்வாமி ஊர்வலம் சென்றடைகிறது. ஏற்பாடுகளை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !