உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயனார், சிவபெருமான் வேடங்களில் "அமுத படையல் நிகழ்ச்சி அரங்கேற்றம்!

நாயனார், சிவபெருமான் வேடங்களில் "அமுத படையல் நிகழ்ச்சி அரங்கேற்றம்!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில், சிறுதொண்டநாயனார், சிவபெருமான் வேடமிட்ட பக்தர்கள், "சிறுதொண்டநாயனார் அமுத படையல் என்னும் நிகழ்ச்சியை பக்திப்பெருக்குடன் நேற்று அரங்கேற்றினர். பெரியபுராணம் 63 நாயன்மார்கள் பக்தி வரலாற்றை விவரிக்கிறது. சோழநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் பரஞ்சோதியாக வாழ்ந்து, சோழமன்னன் படைத்தளபதியாக இருந்து வாதாபியை வென்றவர், சிறுதொண்ட நாயனார். பின்னர், அரசு உயர்பதவியை துறந்து, சிவனடியார்க்கு தினமும் அமுதளித்து நாயனார் மகிழ்ந்தார். ஒருநாள் பைராகி வேடத்தில் வந்து, சிவபெருமான், பிள்ளைக்கறி வேண்டும் எனக்கேட்டார். அதற்காக தன் ஐந்து வயது மகன் சீராளனை அறுத்து சமைத்து இறைவனுக்கு சிறுதொண்ட நாயனார் படைத்தார். பின்னர், அவரது மகனை உயிருடன் இறைவன் எழுப்புவித்தார். இதை நினைவுகூறும் வகையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் சிறுதொண்ட நாயனாரின் அமுதபடையல் நிகழ்ச்சி இன்றைக்கும் நடத்தப்படுகிறது. இதில், சிவபெருமான், சிறுதொண்ட நாயனார் போன்று இருவர் வேடமிட்டு, அடியவர்கள் புடைசூழ தாளம், பாடல் இசைக்க ஊர்வலம் நடத்தப்படும். இதன்படி, சிறுதொண்டநாயனார் பக்தி சிறப்பை விளக்கும் அமுத படையல் நிகழ்ச்சி நெடுவாக்கோட்டையில் நேற்று மதியம், 12 மணிக்கு நடந்தது. இதில், சிவபெருமான், சிறுதொண்ட நாயனார், அடியவர்கள் போல வேடமிட்டு, காட்சியளித்து அமுத படையல் நிகழ்ச்சியை பக்தர்கள் அரங்கேற்றினர். முன்னதாக, நெடுவாக்கோட்டையிலுள்ள ஸ்ரீ கங்காளமூர்த்தி ஸ்வாமி, பிரசன்ன ஸ்வாமி, ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டை பஞ்., தலைவர் குலோத்துங்கன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !