மதுரை மீனாட்சி கோயிலில் பொற்றாமரை பிரதிஷ்டை!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில், மூன்று டன் எடையில் தங்க முலாம் பூசப்பட்ட கலைநயமிக்க, பொற்றாமரை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்தனர். மதுரையில் வறட்சி நிலவிய போதும், ஓராண்டாக குளத்தில் ஒரு அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. தற்போது மழை பெய்து வருவதால் நீர் மட்டம் 2 அடியாக உயர்ந்துள்ளது. குளத்தின் மையத்தில் இருந்த பொற்றாமரையை புதுப்பிக்கும் பணி நிறைவுற்றது. கலைநயமிக்க புதிய பொற்றாமரை மூன்று டன் வெங்கலத்தில் பல பகுதிகளாக தஞ்சை ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டது. அதற்கு தங்க முலாம் பூசும் பணி நிறைவுற்றது. தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ஜெயராமன் முன்னிலையில் புதிய பொற்றாமரையை நிறுவும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை விரைவில் முடிந்து பொற்றாமரை வண்ண மின் அலங்காரத்தில் பொலிவுடன் மிளிர உள்ளது.
மீனம்மா...மீனம்மா...: உலகில் தூங்காத உயிரினம் மீன். அதன் கண்கள் என்றும் அயர்ந்தது கிடையாது. விழித்து கொண்டு தான் இருக்கும். மீன் போல் தூங்காமல் விழித்து கொண்டு உலகை கட்டிக்காத்து ஆட்சி புரிபவள் அன்னை பார்வதி. எனவே, தான் அன்னை பார்வதிக்கு "மீன் "ஆட்சி (மீனாட்சி) என பெயர் வந்தது. பொற்றாமரை குளத்தில் "மீன் "ஆட்சியை குறிக்க வண்ண வண்ண மீன்கள் வளர்க்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.